கவிதை எழுதத் தொடங்கி
கழுதையில் முடிந்தது...
கடுகு பற்றி யோசித்தால்
மலை வருகிறது;
அவனுக்கு ‘ம்ம்’ என்கிறேன்
அவளோடு உரைக்கிறேன்;
நாயும் பன்றியும் கேவலமென்றால்
நீ யார் என்கிறது அகம்;
அலிகளைப் பார்க்கையில் பயக்கிறேன்
ஏன்? விடையில்லை;
சாக்கடையைத் தாண்டுகையில் கறையில்லா
கரை வேட்டியைச் சிந்திக்கிறேன்;
குழந்தையின் பாதத்தை முத்தமிட்டு
ரசித்துச் சிலிர்க்கிறேன்;
பால்காரனுக்கும் பஞ்சுமிட்டாய் விற்பவனுக்கும்
வயதாகிக்கொண்டே போகிறது;
ஓடைக்குள் கிடக்கும் உடைந்த சங்கு
எதைத்தேடி காத்திருக்கிறது;
விண்மீனா மின்மினியா பெரிது
பற்றி ஐயம் எழுகிறது;
புத்தகத்தின் மொந்தையை விழுங்கிச்
செரிக்கும் கரையானாக ஆசைக்கிறேன்;
துளையில்லா புல்லாங்குழல் வாங்க
தேடித்தேடி ஓடிஓடி களைக்கிறேன்;
இப்படியாக-
கவிதை எழுதத் தொடங்கி
கழுதையில் முடிந்தது...

கருத்துகள்