அரங்கேற்றம்


ஒரு கவிதை எழுதி
அரங்கேற்றினேன்
•••
• குருவி முன்
-
சற்று செல்லமாய்ச்
சிறகடித்து
கீச்கீச் என்றது...

• ஆடு முன்
-
சற்று ஒய்யாரமாய்
தலை சாய்த்து
காகிதம் முகர்ந்து
நரிச் நரிச்
எனத் தும்மியது...

• மாடு முன்
-
அழகாய் வாய் உயர்த்தி
ம்ம்ஆஆ என்றும்
அதனினும் அழகாய்
வால் உயர்த்தி
சொத்சொத் என்று
சாணம் இட்டது...

• நாய் முன்
-
வெகு அன்பாய்
வால் குழைத்து
அதனினும் அன்பாய்
கை விரல் நக்கி
சுற்றிச் சுற்றி வந்தது...

• பூனை முன்
-
தன் ஒரு பக்க உடலை
கால் மீது உரசி
ஒரே தாவலில்
மடிமீது அமர்ந்து
உற்றுக் கேட்டது...

• மரம் முன்
-
இரு சருகோடு
தென்றலையும் தூவி
தழுவி நின்றது...

• மானிடர் முன்
-
ஒருவர்
ஆட்காட்டி விரலின்
முன் நக நுனியில்
காது சொரிந்து
அதனை
கட்டை விரலின்
பின் நக நுனியால்
சேமித்திருந்தார்...

ஒருவர்
மூக்குத் துளையில்
விரல் நுழைத்து
காய்ந்த சளி கொய்து
ஆட்காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும்
இடையே வைத்து
விளையாண்டிருந்தார்...

ஒருவர்
கைப்பேசி தொடு திரையில்
ஏதோ ஒன்றை விரட்டி
வென்று களித்திருந்தார்...

ஒருவர்
வெகு நேர்த்தியாய்
கால் ஆட்டிக்கொண்டு
அருகிருந்த மானுடத்தின்
அசைவுகளை
மேய்ந்திருந்தார்...

•••
அவரவர்ட்கு
அவரவர்ப்
பணி
•••
நான்
அரங்கேற்றிக்
கொண்டே இருக்கிறேன்
•••


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Superb
liberty reserve இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணாடி போன்ற ‌‌‌‌‌‌‌‌‌வரிகள் மேலும் வளர வாழ்த்துக்கள்
பசிபுதல்வன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரததாயின் துயர் களைதல்