வாகன சக்கரத்தில் ஊசலாடும் மானுட சந்ததி


சாலையில் -
தலை நசுங்கி
பின்னங்கால்கள்  பரத்தி 
குப்புறக் கிடக்கும்
சொறித்தவளை;

வயிறு அறுந்து
பசிய முட்டை சிதறி
வெறித்த கண்ணோடு
கிடக்கும் ஓணான்;

சரிந்த குடலோடு
மீசை மயிர்கள் காற்றாட
நாறிக் கிடக்கும் பெருச்சாளி;

 தரையோடு தரையாய்
 தாரோடு தாராய்
 நீளுடல்  சிதைந்து
 நைந்துக் கிடக்கும்
 பாம்பு குட்டி;

 தேர்ந்தவனின் ஓவியமாய்
 சுவடாகிக் கிடக்கும்
 அட்டைப் பூச்சி ;
   
 வரிசையாகவே செத்துக்
 கிடக்கும் சிற்றெறும்புகள்;

இந்த-
எளிய உயிர்கள்
ஒரு நாள்
சாலையைக் கடக்கக் கற்கும்.

பின்-இப்
பரந்த பூமியில்
அதன் சந்ததிகள்
மட்டுமே
உயிர் வாழும்...
•••

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரததாயின் துயர் களைதல்