ஆழி சூழ் உலகு
               -ஜோ டி குருஸ்

         ஐயாவோட  முதல் புதினம் இது.ஐநூற்று ஐம்பத்து எட்டுப் பக்கம் கொண்ட அற்புதம்.
     
        பொதுவா நாம  சங்க இலக்கியத்தை தமிழக மக்களோட  வாழ்வியல் களஞ்சியம்னு சொல்லுவோம். நாம அதை அப்படி சொல்றது சரினா ஜோடி குருஸ் ஐயாவோட படைப்ப கடற்கரை மக்களின் வாழ்வியல் களஞ்சியம் அப்படினு தாராளமாச் சொல்லலாம்.

        [கடற்கரை சார்ந்த மக்களா இருந்தாலும் அது சாராத மக்களா இருந்தாலும் எல்லா உடம்புக்கு  உள்ளயும் ‘அதே மனுசன்’ அப்படீங்கற ஒன்னு ஒளிஞ்சுட்டுத்தான் இருக்கு.அதனால இதை பொதுவா கடற்கரைனு மட்டும் சொல்லி ஒதுக்கிடாம நமக்கான வழ்வியல் கருவூலமாவும் நாம ஒத்துக்கிடலாம்னும் தோனுது...]
 
         உலக இலக்கியத்துல நாம பொதுவா ரெண்டு மனுசங்கள மாமேதைனு  சொல்லுவோம்.
1.டால்ஸ்ட்டாய் ஐயா  2.தஸ்தவேஸ்க்கி ஐயா. அதுபோல (நான் ரொம்பவே குறைவா வாசிச்சு இருந்தாலும்கூட )பெருமாள் முருகன் ஐயாவோட அர்த்தநாரி அப்பறம் குருஸ் ஐயாவோட  ஆழி சூழ் உலகு இந்த ரெண்டு படைப்பும் அந்த மாமேதைகளோட படைப்புகள  வாசிக்கிறபோது ஏற்படுத்தக்கூடிய மனக்கிளர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உணர்த்துறதா   இருக்கு.

          உதாரணத்துக்கு சொல்லனும்னா அம்பதாவது  பக்கத்துல ஒருத்தன் லட்சாதிபதியா  இருப்பான். அவன் புள்ள நூறாவது  பக்கத்துல அனாதையா நின்னு சாவும்.

          நூத்தம்பதாவது பக்கத்துல பொறுக்கியா ஒருத்தன் இருப்பான். நல்ல வழிகாட்டியா அவனே  இருநூறாவது பக்கத்துல  மாறி இருப்பான்.

          அதாவது நிலையாமை ,எதுவுமே...எதுவு...மே நிலை இல்லை .எல்லாமே மாறும் மாறும் மாறும் மாறிட்டே இருக்கும்னு மனுசன் இந்தப் படைப்புவழி சொல்லிட்டேப் போறாரு.

         புத்தகம் முழுக்க பரதவ மக்களோட வாழ்க்கைய தெள்ளத்தெளிவா நம்மளாலப்  பாக்க முடியும். இது ஒரு களஞ்சியம்.
 
      மனுசன்  மதம் சார்ந்து அவ்வளவு பேசிருக்காரு.அற்புதமான  விவாதங்களா  இருக்கு அவ்வளவும்.
                                                 
           அதிக அளவுல சொலவடைகள் பயன்படுத்திருக்காரு."யோக்கியம் உள்ள பூனை பரலோவத்துக்கு போவும்போது கவுட்டுக்குள்ள ரண்டு கருவாட்டை வச்சிக்கிற்று போச்சாம் ''.இதுபோல பலப்பல...

    காதல் ,காமம் , உறவு /உணர்வுச்   சிக்கல் , நட்பு ,துரோகம்,நகைச்சுவை,வீரம் ,அறம்  எல்லாமே கிடக்கு இந்த பொக்கிஷத்துல.
       
    மனுச மனத்தோட வக்கிரத்தோட    உச்சமா ஒரு மிகச் சிறந்த காட்சிய உருவாக்கி  விளக்கி இருப்பாரு: நல்ல மனுசன்  அப்படின்ற   சமூக அந்தஸ்து உள்ள ஒருத்தன்  அவனோட நண்பனோட மனைவிய அதுவும் நிறைமாத கர்ப்பிணியை வன்புணர்வு செய்யறதைப்போல ...நாம காமம் காமம்னு எது பின்னால அலைஞ்சுட்டு இருக்கோம்னு  மனுசன்  செருப்பால அடிச்சதுபோல சொல்லிருப்பாரு...
         
    கதையோட தொடக்கமே  சுறாமீன் வேட்டைதான்..எர்னெஸ்ட் ஹெமிங்வே ஐயாவோட கிழவனும் கடலும் எப்படி இருந்துச்சோ கிட்டத்தட்ட அதுபோல  அவ்வளவு இயல்பா தண்ணி மேல மெதக்கிறதைப்போல இருந்துச்சு அத வாசிச்சு கடந்து போறப்போ ...

           பழங்காலத்துல தொழில் முறைல  இருந்த ஒழுங்கு.மீன் குஞ்சுகளை விட்டாதான அதுக வளரும்.வளந்தாதானே வரும் எல்லா  காலத்துலயும்  தொழில் செய்ய முடியும்...ஆனா அதை இப்போ வந்த நவீனம்...! எல்லாத்தையும் வாரி எடுத்துட்டு வந்துருறது... வளம் அழிஞ்சு போறதுனு ...இப்படி...
                                                                          
         
   கச்சத்தீவு பகுதி இலங்கை மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில தோழமையோட சந்திச்சுக்கறதா இருந்த இடம்னு ரொம்ப தெளிவா விளக்குற விதம்...
                                 

     ஒரு மீன்பிடித்  துறைக்கும் இன்னொரு மீன்பிடித் துறைக்கும் இடையில இருந்த உறவு.முன்னதிய ஒழுக்கம் இப்போ கலைஞ்சு போயிட்ட தன்மை...

            மதம் சார்ந்து மத குருக்கள் சார்ந்து எழுப்பப்படும் கேள்வி ....அது
                                 
               
                                 

                                                                                           குறித்த விவாதங்கள் ...                

       அந்த மக்கள் இயல்பா பயன்படுத்துற சொலவடை... வார்த்தைகள்...படிச்சு பாருங்க அவ்வளவு சுவாரசியமா இருக்கும் .எல்லாமே அவ்வ...ளோ நேர்த்தியா இயல்பா இருக்கு ...


       ஏதோ ஒரு பேட்டி ல  அந்த மனுசன் சொல்லிருந்தாரு . "இனி கதையே எழுத வேண்டாம்னு தோணுது ...கதைல வர்ற மனுஷங்களை மனசுல   வச்சுட்டு திண்டாட முடியலனு".அந்த பேட்டிய வாசிச்சப்ப கொஞ்சம் எரிச்சலாத்தான் இருந்துச்சு .ஆனா இந்தக் கதைய வாசிச்சப்போ அதுல உள்ள உண்மைய உணர முடியுது .

     தான்  காதலிச்ச பொண்ண விட்டுட்டு சித்தி பொண்ண திருமணம் செஞ்சுக்க வேண்டிய  சூழல் .அது சார்ந்த விவாதங்கள் ...


      பள்ளிக்கூட வாத்தியார் ஸ்பெசல் கிளாஸ்னு சொல்லி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் குடுக்கறது... இத பகிர்ந்துக்க காரணம் நம்ம குழந்தைங்க எதுனா பள்ளிக்கூடம்...இல்லனா வாத்தியார்ங்க பத்திச்  சொல்லும்போது தயவுசெஞ்சு காது குடுத்து கேளுங்கனு எச்சரிக்கை பண்ணத்தான்  ...   
                                       

         வயசு வந்த பொண்ண வீட்ல வச்சுட்டு விலைமகள் வீட்டுக்கு போற அப்பா...பிற்காலங்கள்ல அந்த பொண்ணோட வாழ்க்கை சூழல் ...

        வட்டிக்கி விட்டு பொழைப்பு நடத்துற ஒருத்தர் வாழ்க்கை எப்படில்லாம் ஆகிப்போகும்னு சுட்டிக்காட்டுற பாங்கு...

   கட்டுமரம், கடல், நீரோட்டம்...மீன் வகை... அது சார்ந்த நிபுணத்துவம்...கடலுக்குள்ள நடக்குற வலைதிருட்டு ...இப்புடி ...


      கடல்ல தனியா மாட்டிக்கிட்ட ஒரு மனுசன் என்னல்லாம் கஷ்டப்படுவான்னு உணர வைக்கிற தருணம்...

                                     
                                    
       நிச்சயம் எல்லோராலையும் வாசிக்கப்படவேண்டிய/கொண்டாடப்பட வேண்டிய  மிகமிக முக்கியமான புதினம் இது .
   
        ஐயாவோட இந்த ஆக பெரிய முயற்சிக்கும் அந்த முயற்சியின்பால் அவருக்கு கிடைத்த வெற்றிக்கும் தலை வணங்கி ...உங்கக்கிட்ட பகிர்ந்துக்கிட்ட மகிழ்ச்சியோடு ...
  
                                                                                                                 அன்பன் -                                                 
                                                                                                                 பசி புதல்வன்














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரததாயின் துயர் களைதல்